நினைப்பதெல்லாம்..நடந்துவிட்டால்..
"மேகக்குழந்தையை சுமக்கும் தாய் வானின் நிறமுடனும்..அம்மேகம் பொழியும் மழையின் கருணை ததும்பும் கண்களுடனும்..சங்கு சக்ர கதாபாணியாய்..சதுர்புஜத்துடன்..வசுதேவரின் முன் மழலையாய் காட்சி தந்தார் விஷ்ணு பகவான். எத்துணை புண்ணியம் செய்திருப்பார் வசுதேவர்..உலகை ரட்சிக்கும் பரந்தாமனை..அந்த பரம்பொருளை..பாற்கடல் நாயகனை..ஸ்ரீதேவி மணாளனை..அந்த அவதார புருஷனை..பிள்ளையாய் பெற. எவனது பாதார விந்தம் பற்றி பரலோக ப்ராப்தி அடைய பாரில் உள்ளோர் அனைவரும் பூஜித்து வேண்டிக்கிடைக்கையில்..அந்த காக்கும் கடவுளையே கையிலேந்தி..உச்சி முகர்ந்து..ஆரத்தழுவி ஆனந்தம் அடையும் பாக்கியம் பெற்ற அம்மகானின் பெயரை உச்சரிக்கவே நாமெல்லாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...." என்று ஸ்ரீகிருஷ்ணரின் கதா காலட்சேபத்தில் பக்தி பரவசத்துடன் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் கோவிந்தாச்சாரியார்.
"கோவிந்தரோட கதா காலட்சேபம் காதால கேட்டாலே புண்ணியம் தான். மனுஷர் என்னமா உருகி உருகி கதை சொல்றார். இவர் சொல்ற அழகை அந்த கண்ணனே ரசிப்பான்" என சிலாகித்து கூறினார் ஒருவர்.
"எல்லாராலையும் இப்படி பக்தி ரசம் சொட்ட சொட்ட காலட்சேபம் பண்...